திருப்பாவை அந்தாதி .
பிராப்ய பிராப்பாக ஸங்கிரகம்
மார்கழித் திங்கள் மணவரைக் காட்டவே
பார்புகழ் நாரணனைக் கூடுமென -- நேர்ந்தனள்
பாவையர் நோன்பு! உரிமையும் உணர்த்துவாள்
பூவையர் கூட்டாக வையத்து!
கிருத்யாக்ருத்ய சங்கல்பம் :
வையத்து வாழ்ச்சி பரமன் அடிபாடல்!
செய்முறை யாவும் ஒழுகலோடு -- ஐயம்
விலக்கி அடியார் அவர்வை கரைநாடல்
துலங்குவார் சன்மம்சீர்த் தோங்கு!
பர சமிர்த்தி பிரயோஜனம் :
ஓங்கு பெரும்சென்நெல் எங்கும் தழைப்பவே
தேங்கு புனல்பெருகி கற்புடை -- மங்கையார்
குறித்தும் குலமன்னர் அந்தணர் என்றிவர்க் காய்
வாரிஎழ ஆழியான் வேட்டு!
விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை :
ஆழிதன் ஆகத் தெழுமேக வண்ணா! நீ
ஊழியான் கைத்தலத்து ஆழிபோல் -- சூழல்
சுழித்து எமக்கு தவுமேல் வளப்பம்
தழைப்பபெய் மாயம் விடுத்து!
பிரம்ஹ ஞான பிரபாவம் :
மாயனை! மாமதுரை மன்னனை! வாயினால்
ஓயாமல் ஓதி மனம்மொழி -- தோய
நினைப்பிடுவார் பாபம்போம்! சேமம்
அனைத்துமாம்! புள்ளுவம் அன்று!
ஆஸ்ரயணத்துக்கு அர்ச்சா சௌலப்யம் என்கை :
புள்ளும் சிலம்பின! பிள்ளாய் உணர்ந்திலையோ?
வெள்ளத் தரவில் துயின்றவன் -- உள்ளம்
புகுந்து குளிர்ந்தாயால்? புள்ளரையன் கோயில்
சகத்திலாய் மற்றவன் கீச்சு!
சேஷத்வத்துக்கு இசைகை :
கீசுகீசு என்று கலந்தன கூட்டில்
நேசமுடன் புட்கள்!நம் நாயகியே! -- ஏசல்
தவிர்ந்தவெம்மை சேடப் பொருள் எனநீ
உவந்திருந்து கீழ்மை அகற்று!
பாரதந்தர்யத்தில் பர்யவசிக்கை :
கீழ்வானம் வெள்ளென்று அக்ஞானம் வீழ்தலும்
ஏழையார் வாழ்வு பகலதாய் -- சூழலினி
அடியார் அவர்பக்கல் இட்ட வழக்காய்
நடமினோ தூமுறுவல் ஏற்று!
போக்த்ருத்வம் விலக்கி போக்யதை ஆகல் :
தூமணி சேரொளி அஃதா மாமாயன் மாதவன்
தேமதுர தாட்கடிமை நேருவதும் -- காமம்
தமக்கென் னாது அவன்பொருட்டாய் ஆகி
உகப்பும் உரித்தவர்க்காய் நோற்று!
சித்த தர்ம சாதனம் :
நோற்று சுவர்க்கம் புகப்பெறல் ஆற்றுவான்
எற்றுக்கோ? அம்மனாய்! செய்தவேள்வி -- நாற்றத்
துழாய்முடி நாரா யணன்நிற்க நம்மால்
சூழப் பெறாதவன் கற்று!
அனுஷ்டான ஔசித்யம் :
கற்றுக் கறவை பலகறந்து தன்கடமை
ஆற்றுவான் பொற்கொடியே! போதராய்! -- போற்றி
முகில்வண்ணன் பேர்பாட வேண்டி இரப்ப
ஆகுமோ கனையா திருப்பு?
அநனுஷ்டான கார்யகரத்வம் :
கனைத்து எருமை முலைவழியே பால்சோ
ரனைத்தில்லம் சேராகும் ! நற்செல்வன் -- தானைத்
தங்காய்! மனத்துக் கினியானைப் பாடவும்
இங்கோ உறங்குமிப் புள்?
ஸ்வயம் பாகம் கோஷ்டி பகிஷ்காரம் :
புள்ளின்வாய்க் கீண்டானை! பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை! கீர்த்திமை -- உள்ளத்தே
உள்ளி எமைத்தள்ளல் கள்ளம்என் றல்லால்என்?
வள்ளன்மை உங்களுக்கு ஈது?
சௌந்தர்யம் ருசி ஜனகம் :
உங்கள் புழக்கடை செங்கழுநீர் வாய்நெகிழ்ப்ப,
சங்கோடு சக்கரம் ஏந்தும்நம் -- அங்கை
அழகன்!மால்! பங்கயக் கண்ணணைப் பாட
எழுவாய்!நீ! எல்லே உணர்!
ஏற்றிட்ட தோஷத்தை இல்லை என்னாது இசைகை :
எல்லே! இளம் கிளியே! எல்லாரும் போந்தார்என்
றல்லால் புகுந்தெண்ணிக் கொள் ! அல்லவை -- சொல்லுமேல்
நானேதான் ஆயிடுக! மாயனை பாடலும்
தானேநின் நாயகம் நீடு!
பாகவத சம்பந்தம் அநுகல்பம் :
நாயகனாம் நந்தகோபன் கோயில்முன் வாயில்
நேய நிலைக்கதவம் காப்போனே! -- ஆயர்
சிறுமியரோம் ஈண்டு துயிலெழப் பாடிப்
பெறுவோம்! அம்பரத் தோடு!
ஸ்தாநீகரை முன்னிடல் : :
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலஆ! -- எம்பிராட்டி
அம்மே! அசோதாய்! செல்வா! பலதேவா!
உம்மால்யாம் உந்தல் கடன்!
புருஷகார பிரபத்தி :
உந்து மதகளி றன்னநம் நந்தகோபன்!
சொந்த மருமகளே! நப்பின்னாய்! -- செந்தா
மரைக்கையால் வந்து திறவாய் மகிழ்ந்து !
நிறைவிளக்கம் அஃதாம் எமக்கு!
பிராபிக்கையில், மிதுனத்துக் குண்டான த்வரை:
குத்து விளக்கு தனைக்காட்டி மற்றவை
அத்தனையும் காட்டும்! நப்பின்னை! -- குற்றம்
கணிசியாது மற்றை அருள்நடப்ப செய்வளே!
மாணியாது முபற்றும் முடித்து!
பெரிய பிராட்டியாலே பேறு என்கிறது :
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! உன் -- அப்பணைக்கு
ஒப்பனவே செய்தருள் நப்பின்னை எம்மோய்!
ஒப்பித்தெம் மின்ஏற்றம் செய்!
ஸ்வரூப பிர்யுக்த தாஸ்யம் :
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிக்கும்
ஆற்றல் பெரும்பசுக்கள் முத்திறமும் -- ஆற்றப்
படைத்தான் மகனே! உமக்கடிமை எம்மின்
படியது! அங்கமல மற்று!
அநன்யார்ஹ சேஷத்வம் :
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்தார் எனவந்து -- நுங்கண்
தலைப்பெய்தோம்! அங்கண் இரண்டும்
மேலைஎம் பால்மாரி போன்று!
கர்ம பாரதந்ரியம் :
மாரி மலைமுழஞ்சில் மன்னிய சிங்கம்தன்
மூரி நிமிர்த்து முழங்கி -- புறப்படுமா
போலே அடிபட இங்கனே போந்தருளி
மேலா மனைத்தும்தா ஆன்று!
மங்களாசாஸனம் :
அன்றிவ் உலகம் அளந்துநீ பெற்றனை !
உன்றன் கழல்வாழி! பல்குணத்த -- நின்திறலும்
பல்லூழி நீடுவாழி! எம்முடைச் சேவகம்
நல்கி ஒருபா டிரங்கு!
அநன்யப் பிரயோஜனர்களாக வந்தமை கூறல் :
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்திக்
கிருத்தி! அற்றதற்றோ எம்மின் -- கருத்தும்!
திருத்தக்க செல்வமும் சேவகமும் கூட்டி
வருத்தமும் தீரமகிழ் மால்!
ஸாம்யாபத்தி மோக்ஷம் :
மாலே மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -- ஆலின்
இலையாய் அருளென்ன மாற்றம் உனக்குடை
மேநிலை எட்டதும் கூட்டு!
சாயுஜ்யம் பலம் :
கூடாரை வேல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் -- ஆடை
அணியும் கூடி இருந்து குளிர்தல்
பேணினோம் நோன்புள் கரந்து !
உபாய வரணம் :
கறவைகள் பின்சென்று உண்போம் அறிவின்
புறப்பாடு இல்லாமால் உன்னைப் -- பிறவி
பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்! கோவிந்தா!
ஆறும்நீ யாதலே சித்து!
புருஷார்த்த நிர்ணயம் :
சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து
குற்றேவல் லெங்களைக் கொள்வாயால் -- உற்றோமாய்
ஆட்செய்வோம்! மற்றைநம் காமங்கள் மாற்று ! எம்
பாழ்த்தவினை வங்கத் தழுத்து !
பல வியாப்த்தி :
வங்கக் கடல்கடைந்த மாதவனால், கேசவனால்
திங்கள் திருமுகத்து சேயிழையார் -- அங்கப்
பறைகொண்ட வாற்றை அணிபுதுவை கோதை
நிறைசெய்தாள் மார்கழிஇன் புற்று!
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.
(K S Srinivasan).
No comments:
Post a Comment