Wednesday, January 22, 2020

திருப்பாவை அந்தாதி .

திருப்பாவை அந்தாதி .


பிராப்ய பிராப்பாக ஸங்கிரகம்

மார்கழித் திங்கள் மணவரைக் காட்டவே 
பார்புகழ் நாரணனைக் கூடுமென -- நேர்ந்தனள் 
பாவையர் நோன்பு! உரிமையும் உணர்த்துவாள்  
பூவையர் கூட்டாக வையத்து!

கிருத்யாக்ருத்ய சங்கல்பம் :

வையத்து வாழ்ச்சி பரமன் அடிபாடல்!
செய்முறை யாவும் ஒழுகலோடு -- ஐயம் 
விலக்கி  அடியார் அவர்வை கரைநாடல்  
துலங்குவார் சன்மம்சீர்த் தோங்கு!  

பர சமிர்த்தி பிரயோஜனம் :

ஓங்கு பெரும்சென்நெல் எங்கும் தழைப்பவே 
தேங்கு  புனல்பெருகி கற்புடை -- மங்கையார்  
குறித்தும் குலமன்னர் அந்தணர்  என்றிவர்க்காய் 
வாரிஎழ ஆழியான் வேட்டு!

விதேயனான பர்ஜன்ய தேவதைக்கு கையோலை  :

ஆழிதன் ஆகத் தெழுமேக வண்ணா! நீ 
ஊழியான் கைத்தலத்து ஆழிபோல் -- சூழல் 
சுழித்து எமக்கு தவுமேல் வளப்பம் 
தழைப்பபெய் மாயம் விடுத்து!

பிரம்ஹ ஞான பிரபாவம் :

மாயனை! மாமதுரை மன்னனை! வாயினால் 
ஓயாமல் ஓதி மனம்மொழி -- தோய 
நினைப்பிடுவார் பாபம்போம்! சேமம் 
அனைத்துமாம்! புள்ளுவம் அன்று!

ஆஸ்ரயணத்துக்கு அர்ச்சா சௌலப்யம் என்கை : 

புள்ளும் சிலம்பின! பிள்ளாய்  உணர்ந்திலையோ?
வெள்ளத் தரவில் துயின்றவன் -- உள்ளம் 
புகுந்து குளிர்ந்தாயால்? புள்ளரையன் கோயில் 
சகத்திலாய் மற்றவன் கீச்சு!

சேஷத்வத்துக்கு இசைகை  :

கீசுகீசு என்று கலந்தன  கூட்டில்  
நேசமுடன்  புட்கள்!நம் நாயகியே! -- ஏசல்  
தவிர்ந்தவெம்மை சேடப் பொருள் எனநீ 
உவந்திருந்து  கீழ்மை அகற்று!

பாரதந்தர்யத்தில் பர்யவசிக்கை :

கீழ்வானம் வெள்ளென்று அக்ஞானம் வீழ்தலும் 
ஏழையார் வாழ்வு பகலதாய் -- சூழலினி 
அடியார் அவர்பக்கல்  இட்ட வழக்காய் 
நடமினோ தூமுறுவல் ஏற்று!

போக்த்ருத்வம் விலக்கி போக்யதை ஆகல் :

தூமணி  சேரொளி அஃதா மாமாயன் மாதவன் 
தேமதுர தாட்கடிமை நேருவதும் -- காமம் 
தமக்கென் னாது அவன்பொருட்டாய் ஆகி  
உகப்பும் உரித்தவர்க்காய் நோற்று!

சித்த தர்ம சாதனம் :

நோற்று சுவர்க்கம் புகப்பெறல் ஆற்றுவான் 
எற்றுக்கோ? அம்மனாய்! செய்தவேள்வி -- நாற்றத் 
துழாய்முடி நாரா யணன்நிற்க நம்மால் 
சூழப் பெறாதவன் கற்று!

அனுஷ்டான ஔசித்யம் :

கற்றுக் கறவை பலகறந்து தன்கடமை 
ஆற்றுவான் பொற்கொடியே! போதராய்! -- போற்றி 
முகில்வண்ணன் பேர்பாட வேண்டி இரப்ப 
ஆகுமோ கனையா திருப்பு?

அநனுஷ்டான கார்யகரத்வம் :

கனைத்து எருமை முலைவழியே பால்சோ
ரனைத்தில்லம் சேராகும் ! நற்செல்வன் -- தானைத் 
தங்காய்! மனத்துக் கினியானைப் பாடவும் 
இங்கோ உறங்குமிப் புள்? 

ஸ்வயம் பாகம் கோஷ்டி பகிஷ்காரம்  : 

புள்ளின்வாய்க் கீண்டானை! பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானை! கீர்த்திமை -- உள்ளத்தே 
உள்ளி எமைத்தள்ளல் கள்ளம்என் றல்லால்என்?
வள்ளன்மை உங்களுக்கு ஈது?

சௌந்தர்யம் ருசி ஜனகம் :

உங்கள் புழக்கடை செங்கழுநீர் வாய்நெகிழ்ப்ப, 
சங்கோடு சக்கரம் ஏந்தும்நம்  -- அங்கை 
அழகன்!மால்! பங்கயக் கண்ணணைப் பாட 
எழுவாய்!நீ! எல்லே உணர்!

ஏற்றிட்ட தோஷத்தை இல்லை என்னாது இசைகை :

எல்லே! இளம் கிளியே! எல்லாரும் போந்தார்என் 
றல்லால் புகுந்தெண்ணிக் கொள் ! அல்லவை -- சொல்லுமேல் 
நானேதான் ஆயிடுக! மாயனை பாடலும் 
தானேநின் நாயகம் நீடு!

பாகவத சம்பந்தம் அநுகல்பம் :

நாயகனாம் நந்தகோபன் கோயில்முன் வாயில் 
நேய நிலைக்கதவம் காப்போனே!  -- ஆயர் 
சிறுமியரோம் ஈண்டு துயிலெழப் பாடிப் 
பெறுவோம்! அம்பரத் தோடு!

ஸ்தாநீகரை முன்னிடல் : :

அம்பரமே  தண்ணீரே சோறே அறம்செய்யும் 
எம்பெருமான் நந்தகோ பாலஆ! -- எம்பிராட்டி 
அம்மே! அசோதாய்! செல்வா! பலதேவா! 
உம்மால்யாம் உந்தல் கடன்!

புருஷகார பிரபத்தி  : 

உந்து மதகளி றன்னநம் நந்தகோபன்! 
சொந்த மருமகளே! நப்பின்னாய்! -- செந்தா 
மரைக்கையால் வந்து திறவாய் மகிழ்ந்து !
நிறைவிளக்கம் அஃதாம் எமக்கு!

பிராபிக்கையில், மிதுனத்துக் குண்டான த்வரை:

குத்து விளக்கு தனைக்காட்டி மற்றவை 
அத்தனையும் காட்டும்! நப்பின்னை! -- குற்றம் 
கணிசியாது மற்றை அருள்நடப்ப செய்வளே! 
மாணியாது  முபற்றும் முடித்து!

பெரிய பிராட்டியாலே பேறு என்கிறது :

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே! உன் -- அப்பணைக்கு  
ஒப்பனவே செய்தருள்  நப்பின்னை எம்மோய்! 
ஒப்பித்தெம் மின்ஏற்றம் செய்! 

ஸ்வரூப பிர்யுக்த தாஸ்யம் :

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிக்கும் 
ஆற்றல் பெரும்பசுக்கள் முத்திறமும் -- ஆற்றப் 
படைத்தான் மகனே! உமக்கடிமை எம்மின் 
படியது! அங்கமல மற்று! 

அநன்யார்ஹ சேஷத்வம் :

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான 
பங்கமாய் வந்தார் எனவந்து -- நுங்கண் 
தலைப்பெய்தோம்! அங்கண் இரண்டும் 
மேலைஎம் பால்மாரி போன்று! 

கர்ம பாரதந்ரியம் :

மாரி மலைமுழஞ்சில் மன்னிய சிங்கம்தன் 
மூரி நிமிர்த்து முழங்கி -- புறப்படுமா 
போலே அடிபட இங்கனே போந்தருளி 
மேலா மனைத்தும்தா ஆன்று!

மங்களாசாஸனம் :

அன்றிவ் உலகம் அளந்துநீ பெற்றனை  !
உன்றன் கழல்வாழி! பல்குணத்த -- நின்திறலும்  
பல்லூழி  நீடுவாழி!  எம்முடைச் சேவகம் 
நல்கி  ஒருபா டிரங்கு!

அநன்யப் பிரயோஜனர்களாக வந்தமை கூறல் :

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்திக் 
கிருத்தி! அற்றதற்றோ எம்மின் -- கருத்தும்!
திருத்தக்க செல்வமும் சேவகமும் கூட்டி 
வருத்தமும் தீரமகிழ் மால்! 

ஸாம்யாபத்தி மோக்ஷம் :

மாலே மணிவண்ணா!  மார்கழிநீ ராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன -- ஆலின் 
இலையாய் அருளென்ன மாற்றம் உனக்குடை 
மேநிலை எட்டதும்  கூட்டு!

சாயுஜ்யம் பலம்  :

கூடாரை வேல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப் 
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் -- ஆடை 
அணியும் கூடி இருந்து  குளிர்தல் 
பேணினோம் நோன்புள்  கரந்து !

உபாய வரணம் :

கறவைகள் பின்சென்று உண்போம் அறிவின் 
புறப்பாடு இல்லாமால் உன்னைப் -- பிறவி 
பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம்! கோவிந்தா!
ஆறும்நீ யாதலே சித்து!

புருஷார்த்த நிர்ணயம் :

சிற்றம் சிறுகாலை வந்துன்னைச் சேவித்து 
குற்றேவல் லெங்களைக் கொள்வாயால் -- உற்றோமாய் 
ஆட்செய்வோம்! மற்றைநம் காமங்கள் மாற்று ! எம் 
பாழ்த்தவினை வங்கத் தழுத்து !

பல வியாப்த்தி :

வங்கக் கடல்கடைந்த மாதவனால், கேசவனால் 
திங்கள் திருமுகத்து சேயிழையார் -- அங்கப் 
பறைகொண்ட வாற்றை அணிபுதுவை கோதை  
நிறைசெய்தாள் மார்கழிஇன் புற்று! 

கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன்  ஸ்ரீநிவாச தாஸன்.
(K S Srinivasan).